"தலைவி" திரைப்பட கதாநாயகிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

#TamilCinema #Court Order
Prasu
3 years ago
"தலைவி" திரைப்பட கதாநாயகிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

அவதுாறு வழக்கில் நேரில் ஆஜராக தவறினால் கைது 'வாரன்ட்' பிறப்பிக்கப்படும்' என, ஹிந்தி நடிகை கங்கணா ரணாவத்தை மும்பை நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இங்கு, நடிகை கங்கணா ரணாவத் மீது, 'டிவி' பேட்டி ஒன்றில் தன்னைப் பற்றி அவதுாறாக கூறியதாக, திரைப்பட பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கங்கணா தாக்கல் செய்த மனுவை, மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்நிலையில் , கங்கணா மீதான அவதுாறு வழக்கு, மும்பை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கங்கணாவின் வழக்கறிஞர் 'திரைப்பட விளம்பரத்திற்காக கங்கணா சென்ற போது, அவருக்கு கொரோனா அறிகுறி தோன்றி இருப்பதால், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த ஜாவேத் அக்தர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை இழுத்தடிக்கவே கங்கணா ஏதாவது ஒரு சாக்கு சொல்லி வருவதாக குற்றஞ்சாட்டினார்.

இதையடுத்து, ''அடுத்த முறை வழக்கு விசாரணைக்கு கங்கணா நேரில் ஆஜராகத் தவறினால் கைது வாரன்ட் பிறப்பிக்கப்படும்,'' என, நீதிபதி ஆர்.ஆர்.கான் எச்சரித்து, வழக்கை 20ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.